VijayramOnline Blogging
Request
To make your entry, choose a blog...


   Create your own blog

===========================================================================
Subject: நீண்டதொரு பயனம்
Message: #3  2023-01-31  
‘மார்க்கபந்து… மொதல்
சந்து… அடடா பேரு கவிதை
மாதிரி இருக்கே’ – வசூல்
ராஜா எம்.பி.பி.எஸ்.
படத்தில் , திரு. கிரேசி
மோகன் எழுதி, திரு
கமல்ஹாசன் பேசிய ஆரம்ப
நகைச்சுவை வசனம் இதுதான்..
படம் முழுக்க வயிறு நோக
சிரிக்காமல் வெளியில் வர
முடியாது! உலகம் முழுவதும்
285 திரையரங்குகளில், சுமார்
400 மில்லியன் இந்திய
ரூபாய்களை வசூல் செய்து
சாதனை படைத்த திரைப்படம்
இது. கமல்ஹாசன், சினேகா,
பிரபு, பிரகாஷ்ராஜ்,
நாகேஷ், மாளவிகா போன்ற
பலரும் கலக்கியிருந்த
இப்படம் கிட்டத்தட்ட 10
மில்லியன்
பார்வையாளர்களைக்
கவர்ந்துள்ளது! வசூலில்
குறிப்பிடும் அளவிற்கு
சாதனை படைத்துள்ள
திரைப்படம் இது.

‘ஆண்டவன் சொல்றான்…
அருணாச்சலம்
முடிக்கிறான்’ – ‘சூப்பர்
ஸ்டார்’ ரஜினிகாந்த்
அவர்களை ஒரு அடி உயரச்
செய்த உன்னத வசனத்தின்
படைப்பாளர். எந்திரன்
திரைப்படத்திலும் தம்
தந்திர மொழியால் ஒரு
கலக்கு கலக்கியிருப்பவர்
நம் கிரேசி மோகன் அவர்கள்.

crazy0

பி.ஈ., எம்.டெக். படிப்பை
முடித்ததும்
சுந்தரம்-கிளேட்டனில்
பொறியாளராகப்
பணியாற்றியவர், எழுத்தின்
மீது ஏற்பட்ட தணியாத
தாகத்தால், தம் பணியை
விடுத்து முழு நேர
எழுத்தாளராக தம்மை
மாற்றிக்கொண்டவர்.
நகைச்சுவையே தம் உயிர்
மூச்சு என்று வாழ்பவர்.
இவர் பேச்சு அனைத்துமே
நகைச்சுவை.. நகைச்சுவை..
நகைச்சுவைதான். தாம்
துளியும் சிரிக்காமல்
சீரியசாக முகத்தை
வைத்துக்கொண்டு மற்றவரை
விழுந்து, விழுந்து
சிரிக்க வைப்பது இவருக்கு
கைவந்த கலை.
திரைப்படங்களில்,
வசனங்களில் என்றில்லாமல்
இயல்பாகவே இப்படியொரு
குணம் கொண்டவர் திரு
கிரேசி மோகன். திரு.
கமல்ஹாசன் மூலம், அபூர்வ
சகோதரர்கள்
திரைப்படத்திற்கு வசனம்
எழுதி திரையுலகில்
அறிமுகம் ஆனவர். தொடர்ந்து
மைக்கேல் மதன காமராஜன்,
மகளிர் மட்டும், சதி
லீலாவதி, தெனாலி, அவ்வை
ஷண்முகி, பஞ்ச தந்திரம்,
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ,
ஆஹா, காதலா காதலா, நான் ஈ
உள்ளிட்ட நாற்பதிற்கும்
மேலான திரைப்படங்களுக்கு
கதை- வசனகர்த்தாவாக
பணியாற்றி அனைத்து
வெற்றிகளிலும் பங்கு
பெற்றவர். ரஜினி, பிரபு,
சூர்யா என்று முன்னணி
நாயகர்கள் பலரின்
படங்களுக்கு தொடர்ந்து
எழுதிக்கொண்டிருப்பவர்.
மேடை நாடகங்கள் பலவற்றை
எழுதி, நடித்து, வெற்றி
கண்ட இவர் எழுதிய ‘க்ரேஸி
தீவ்ஸ் இன் பாலவாக்கம்’
என்ற நாடகம் பெற்ற
மாபெரும் வெற்றி, திரு.
மோகன் அவர்களை ‘கிரேசி
மோகன்’ ஆக்கியிருக்கிறது!

craz2

தாம் தம் பணியை விட்டு,
முழுநேர எழுத்தாளரானதன்
காரணத்தைக் கேட்டால், அவர்
தம் வழமையான நகைமொழியில்,

“எல்லோரும் சொல்வார்கள்,
மோகன் சுந்தரம் கிளேட்டன்
வேலையை விட்டதற்குக்
காரணம் சினிமா ஆசை, நாடக
ஆர்வம் என்று. ஆனால் அது
உண்மையில்லை. உண்மையான
காரணம் நாய் பயம். சுந்தரம்
கிளேட்டனில் நைட் ஷிப்ட்
முடித்து வீட்டுக்கு
வரும் போது ஜெமினியில் ஒரு
குரூப் நாய் என்னை
பிடித்துக் கொள்ளும்.
அப்படியே ஸ்டெல்லா மாரிஸ்
வரை கூடவே வந்து, என்னை
அங்கே விட்டுவிட்டுப்
போய்விடும். அங்கே இன்னொரு
குரூப் நாய் காத்துக்
கொண்டிருக்கும். அது
மியூசிக் அகாடமி
வரைக்கும் கொண்டு வந்து
விடும். பின் அங்கிருந்து
வீடு. எனக்காகவே பிளான்
பண்ணி அந்தக் காலத்தில்
நாய்கள் குரூப் வாழ்ந்து
வந்திருக்குமோ என்று
சந்தேகம். ரிலே ரேஸ் மாதிரி
என்னை அவை சுற்றிச்சுற்றி
வந்தன. என்னால்
முடியவேயில்லை ரொம்ப
பயமாகிப் போய்விட்டது.
குரைக்கிற நாய் கடிக்காது
என்பதெல்லாம் பொய். நான்
நம்பவே மாட்டேன். நாய்
பத்தின எந்த பழமொழியையும்
நான் நம்ப மாட்டேன். எனக்கு
நாய் பயம் ரொம்ப ஜாஸ்தி.
அதனால்தான் வேலையை
விட்டேன். அதுதான் உண்மை”
என்ற பதிலே வருகிறது!

cas

‘இயல்’, ‘இசை’, ‘நாடகம்’
என்ற முத்தமிழில் முத்தான
மூன்றாம் தமிழ்
நாடகத்தமிழ். சொல் வடிவான,
‘இயல்’, சொற்களோடு இசையும்
சேர்ந்த வடிவமே ‘இசை’.
‘இயல்’, ‘இசை’ மற்றும் உடல்
அசைவுகளை அடிப்படையாகக்
கொண்ட வடிவமே ‘நாடகம்’
என்பது. உள்ளம் உவகை
கொள்ளும் வகையில் ஆடலும்,
பாடலும் சேர்ந்து
விளங்குவது நாடகம் (நாடு+
அகம்). கலித்தொகை, பரிபாடல்
போன்ற சங்க
இலக்கியங்களில் நாடகக்
கூறுகளை காணமுடிகிறது.

நாடக வழக்கினைப் பற்றித்
தொல்காப்பியம் ,

“நகையே அழுகை இளிவரல்
மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி
உவகையென்று
அப்பா லெட்டாம் மெய்ப்பா
டென்பர்-” என்கிறது.

கி.பி.18ஆம் நூற்றாண்டளவில்,
இராமநாடகக் கீர்த்தனை,
நந்தனார் சரித்திரக்
கீர்த்தனை போன்ற
நாடகங்கள் மிகப் புகழ்
பெற்றிருந்தாலும், கி.பி.
பத்தொன்பதாம்
நூற்றாண்டிலேயே நாடகம்
அதிவேக வளர்ச்சி
பெறலாயிற்று. 20 -ம்
நூற்றாண்டின் தொடக்கம்
முதல் ஐம்பதாண்டு காலம்
தமிழ் நாடகக் கலைக்குப்
பெரும் பங்காற்றியவர்கள்
தி .க.சங்கரன் ,தி.க
.முத்துசாமி ,தி .க .சண்முகம்
,தி.க. பகவதி ஆகியோர் . தமிழ்
மரபுவழி நாடகங்கள் சீரான
வளர்ச்சியினை எட்டியபோது
தி.க.சண்முகத்தின்
இராஜராஜசோழன் , மற்றும்
நாடகக் காவலர் என்று
பாராட்டப்பட்ட திரு. ஆர்
.எஸ் . மனோகர் அவர்களின்
“இலங்கேஸ்வரன் ” என்ற
நாடகத்தின் மூலமும் தமிழ்
நாடகக் கலை மிகவும்
பிரபலமடைந்தது எனலாம்.
நாடகத் துறையில் ஆழமாகத்
தம் தடம் பதித்தவர்கள்
பலர். காசி விசுவநாத
முதலியார், தவத்திரு
சங்கரதாஸ் சுவாமிகள்,
பரிதிமாற் கலைஞர், பம்மல்
சம்பந்த முதலியார்,
திண்டிவனம் ராமசாமி ராஜா,
பேராசிரியர் சுந்தரம்
பிள்ளை, நவாப்
ராஜமாணிக்கம்,
எம்.ஆர்.ராதா,
ஆர்.எஸ்.மனோகர் , கிரேசி
மோகன், எஸ்.வி. சேகர், ஒய்.ஜி.
மகேந்திரன் ஆகியோர்
குறிப்பிடத்தக்கவர்கள்.
கிட்டத்தட்ட மூவாயிரம்
ஆண்டுகளாக தமிழ்
நாடகங்கள் ,ஏற்றம் கண்டு,
காலந்தோறும் சமுதாய
மலர்ச்சிக்கும் ,
மாற்றத்திற்கும் களனாக
விளங்கி வருகிறது என்பது
வெள்ளிடைமலை.

cmy

ஒரு நாடகத்திற்கு அதன்
களன் என்பதே அடிப்படை.
நாடகம் இவ்வளவு கால நேரம்
கொண்டதாக இருக்க வேண்டும்
என்ற வரையறை ஏதும்
இல்லாதலால், புனையப்படும்
நாடகம் நடிப்பவரின்
மெய்ப்பாடு, குரல் அழுத்த
வேறுபாடு போன்றவற்றின்
மூலம் வசனங்களை
மெருகூட்டி, காண்போரை
வசீகரிக்கச் செய்யும்
வகையில் அதன் கால
நீட்டிப்பும்
நிர்ணயிக்கப்படுகிறது.
நாடகங்கள், சமூக நாடகங்கள்,
புராண இதிகாச நாடகங்கள்,
வரலாற்று நாடகங்கள்,
நகைச்சுவை நாடகங்கள்,
அரசியல் நாடகங்கள் போன்ற
பல வகைகளில் இருந்தாலும்,
சமீபத்தில் இப்படி எந்த
கட்டுக்குள்ளும் அடங்காத
ஒரு வித்தியாசமான களனில்
அமைந்த ஒரு நாடகம் காணும்
வாய்ப்பு அமைந்தது. அந்த
நாடகத்தைக் காணும்போது,

‘எழுத்தாளர்கள்,
ஓவியர்கள், கவிஞர்கள்
என்று படைப்பாளிகளுக்கு
ஒரு தரம் இருக்கிறது. அது
தராதரம் இல்லாததாக
ஆகிவிடக் கூடாது. அதில்
ஒருவனுக்கு கவனம் இருக்க
வேண்டும். பணத்துக்காக
நாம் எதை வேண்டுமானாலும்
செய்யலாம் என நினைக்கும்
போதுதான் தரம் கீழே
இறங்குகிறது. அவ்வாறு
செய்வது அவன் சார்ந்த
துறைக்கே துரோகம்
செய்வதாகும். நகைச்சுவை
என்னுடைய வீடு. அதில் நான்
என்ன செய்தாலும், எதை
எழுதினாலும் அதன் தரம்
கெடாமல் பார்த்துக் கொள்ள
வேண்டியது எனது பொறுப்பு.
அதைத்தான் நான் செய்து
கொண்டு வருகிறேன்’ என்று
தன்னிலை விளக்கம்
அளிக்கும் திரு கிரேசி
மோகன் அவர்கள் இதைத்
தவறாமல்
கடைப்பிடிப்பவரும்கூட
என்பதையும் ஏற்றுக்கொள்ள
முடிந்தது.

‘சிரி, சிந்தி. சிந்திக்க
முடியவில்லையா, சிரி,
மீண்டும் சிரி – இதுதான்
எனது நாடகங்களின் கருத்து.
ஏனென்றால் சிரிப்பதையே
மிகப் பெரிய சமூகச்
சீர்திருத்தமாக நான்
கருதுகிறேன்’ என்று
இயல்பாகக் கூறும் திரு
கிரேசி மோகன் மேலும்,
‘நகைச்சுவை மூலம் நீங்கள்
சமுதாயத்திற்கு என்ன சேவை
செய்திருக்கிறீர்கள்
என்று கேட்டால்,
நகைச்சுவையே மிகப்பெரிய
சேவை என்பேன். நான்
சமுதாயத்தை
மாற்றுவதற்காகப்
போராடுகிறேன். அதற்காக என்
வியர்வையை, இரத்தத்தைச்
சிந்தி, அதைப் பேனாவில்
மையாக ஊற்றி எழுதுகிறேன்
என்றெல்லாம் ஒருவர்
சொன்னால் அதெல்லாம்
சும்மா பம்மாத்து. சுத்த
பேத்தல். எந்த
எழுத்தாளராலும்
சமூகத்தில் மாற்றங்களைக்
கொண்டு வந்துவிட முடியாது.
சமுதாயத்தில் நிறைய
புரையோடிப் போன அல்சர்கள்,
அப்பெண்டிசைடிஸ்கள்
இருக்கின்றன. அவற்றை
குணமாக்குவதற்கு நிறைய
டாக்டர்கள் வேண்டும்.
ஆனால் இந்த எழுத்தாளர்கள்
அந்த டாக்டர்கள் கிடையாது.
அந்த social doctors யார் என்று
கேட்டால் அவர்கள்தான்
மதர் தெரஸா, சுவாமி
விவேகானந்தர், ராமகிருஷ்ண
பரமஹம்சர், ரமண மகரிஷி,
பாரதி போன்றவர்கள்’
என்கிறார்.

அமெரிக்கா, துபாய், மஸ்கட்,
குவைத், சிங்கப்பூர்,
ஸ்ரீலங்கா, ஹாங்காங் என்று
பல்வேறு நாடுகளுக்கும்
சென்று நாடகம் நடத்தி
பெரும் வரவேற்பு
பெற்றுள்ளவர்.
அமெரிக்காவில் மட்டுமே
நூற்றுக்கணக்கான
நிகழ்ச்சிகள் நடத்தி
சாதனை புரிந்துள்ளார்.
1979ல், தம் சொந்த நாடகக்
குழுவான ‘கிரேசி
கிரியேஷன்ஸ்’ என்பதைத்
தொடங்கியுள்ளார். தனது
தம்பி திரு. மாது
பாலாஜியுடன் இணைந்து
இன்றுவரை
பத்தாயிரத்திற்கும்
மேற்பட்ட நாடகங்கள்
நடித்து சாதனை
படைத்துக்கொண்டிருக்கிறார்.
மேரேஜ்இன் மேட் இன்சலூன் ,
கிரேசி தீவ்ஸ் இன்
பாலவாக்கம், கிரேசி
கிஷ்கிந்தா, மீசையானாலும்
மனைவி, போன்ற இவருடைய பல
நாடகங்கள் பிரபலமானவை.
அந்த வரிசையில் , தற்போது
மிகப் பிரபலமாக, சாதனைப்
படைத்துக்கொண்டிருக்கும்,
‘சாக்லேட் கிருஷ்ணா’
நாடகம் குறித்து திரு
கிரேசி மோகன் அவர்கள்,

“6 வருடங்களுக்கு முன்பு
அரங்கேற்றம் ஆனது
‘சாக்லேட் கிருஷ்ணா’…..
கிட்டத்தட்ட 750 முறைகள்
உலகம் முழுவதும்
போட்டது….500 வது ஷோ
அமெரிக்காவின் ஹ்யூஸ்டன்
நகரில் நிகழ்ந்தது…. 600 வது
ஷோ சிங்கப்பூரில்…. இந்த
பிரும்மாண்டமான
வெற்றிக்குக் காரணம்,
எனக்குத் தோன்றிய வரையில்,
என் எழுத்தோ, நடிப்போ
அல்ல…. 36 வருடங்களாக
‘கூட்டுக் குடும்பமாக’
வாழும் ‘கிரேசி
கிரியேஷன்ஸ்’ குழு
உறுப்பினர்களின்
ஒற்றுமையே… மேலும் கடவுள்
கண்ணனின் அருள்…. லாஜிக்கை
மீறிய மேஜிக் ஹ்யூமர்….
மேஜிக்கோடு ஹுமரையும்
இணைத்ததால் இந் நாடகம்
இன்னமும் கூஜிக்ஜிக்
ரெயில் போல
ஓடிக்கொண்டிருக்கிறது….
ஒவ்வொரு முறையும்
வெளியூர் செல்லும் போது
‘வெண்பாவில்’ கண்ணனை
வேண்டி துணைக்கு
அழைப்பேன்” என்கிறார்.

வேண்டுதல் வெண்பாக்கள்
இதோ ; https://www.vallamai.com/?p=54292

இந்த நாடகம், அரங்கு
நிறைந்த காட்சியாக,
பெருவாரியான இரசிகர்களைக்
கவர்ந்திருப்பதன் காரணம்,
இதன் வித்தியாசமான
கதைக்களமும்தான். பொதுவாக,
பக்திக் கதைகளில், பக்தன்
வேண்டிக் கொள்ள கடவுள்
காட்சி தந்து, என்ன வரம்
வேண்டும் என்று கேட்பார்.
அவனுக்கு வேண்டிய
உதவிகளைச் செய்வார். ஆனால்
சாக்லேட் கிருஷ்ணாவில்,
முற்றிலும் மாறுபட்ட
வகையில், சாக்லேட்
கம்பெனியில் வேலை
செய்யும் மாது,
சாக்லேட்கள் கொஞ்சமும்
விற்காதலால்,
அலுவலகத்தில் பல்வேறு
பிரச்சனைகளுக்கு
ஆளாகிறார். கிருஷ்ணரை
வேண்டிக்கொள்பவர் முன்
பெருமான் தோன்றுகிறார்.
ஆனால் அவர் மாதுவுக்கு
வரம் தருவதற்காக
வருவதில்லை. தன்னுடைய சில
பிரச்சனைகளிலிருந்து
தப்பித்துக் கொள்வதற்காக
பூமிக்கு வருகிறார்.
அர்ச்சுனரும்
கிருட்டிணரும் நட்பாக
இருந்தது போல, மாதுவுடன்
மிக யதார்த்தமான நல்ல
நண்பனாக இருந்து அவருக்கு
என்ன உதவிகள், எப்படி
செய்து விட்டுப் போகிறார்
என்பதுதான் கதை. இதில்
நிறைய மாயாசாலங்களும்
செய்திருக்கிறார்கள்
என்பதும்
குறிப்பிடத்தக்கது. இது
குறித்து திரு கிரேசி
மோகன் அவர்களிடம்
கேட்டபோது, இதற்காகத் தானே
மேஜிக் கற்றுக்
கொண்டிருப்பதாகக் கூறி
ஆச்சரியமேற்படுத்துகிறார்.

crazy3

ஸ்ரீகிருஷ்ணர் (கிரேசி
மோகன்) திடீரென்று கை
நீட்டினால் மாயமாக கையில்
புல்லாங்குழல் வரும்.
ஆண்டாள் கிளி வேண்டும்
என்று கேட்டு
ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து
தொலைபேசியில் அழைக்க,
அப்போது, கிருஷ்ணர் ஏதோ
மந்திரம் போட்டதும்,
அங்கிருந்த ஒரு துணி
கிளியாக மாறி, அப்படியே
பறந்து போய்விடும். இந்த
இடத்திலெல்லாம் அரங்கமே
அதிரும் அளவிற்கு
கைதட்டல் பெறுகிறார். இந்த
வகையில் இந்நாடகத்தில்
குழந்தைகளைக் கவரும்
அம்சங்கள் நிறையவே
இருக்கின்றன. அனைவரும்
குழந்தைகளாகி மனம்
விட்டுச் சிரிக்கவும்
முடிகிறது. கிட்டத்தட்ட 1 .40
மணி நேரம் ஒரு நிமிடமாகக்
கரைந்தது நிகழ்ச்சி
முடியும்போதுதான்
தெரிந்தது. பங்குபெற்ற
கலைஞர்கள் அனைவரும்
தங்கள் பங்கை மிகச்
சிறப்பாகச்
செய்திருந்தனர்.

நாடகத்தின் இறுதியில்
கிருட்டிணர் தாம் வந்த
வேலை முடிந்துவிட்டது,
திரும்பிச்
செல்லப்போவதாகச்
சொல்லும்போது, மாது சோகமே
உருவாக, ‘போய்த்தான்
ஆகவேண்டுமா கிருஷ்ணா’
என்று கேட்டு கண்கலங்கும்
போது, உடன் நம்மையும்
உள்ளம் நெகிழச் செய்யும்
அத்தருணமே இந்நாடகத்தின்
பூரண வெற்றி முழுமையாகப்
புலப்படுகிறது!

‘நமது அறிவை, ஆர்வத்தை
கடவுள் நமக்குக் கொடுத்த
திறமையைக் கொண்டு
வாசகர்களையோ,
பார்வையாளர்களையோ இப்ப
இருக்கும் கட்டத்தை
விட்டு அடுத்த
கட்டத்திற்குக் கொண்டு
செல்ல முடிகிறதா அல்லது
அதே கட்டத்தில்தான்
அவர்களை வைத்திருக்கிறோமா
என்று பார்க்க வேண்டும்.
அட்லீஸ்ட் கீழே
இறக்காமலாவது இருக்கிறோமா
என்று பார்க்க வேண்டும்.
அதுதான் ஒரு
படைப்பாளியின் தார்மீகமான
கட்டுப்பாடாக இருக்க
வேண்டும்’ என்று சமுதாய
நற்சிந்தையுடன் கூறும்
திரு கிரேசி மோகன்
அவர்களுக்கு, ஸ்ரீராம்
பாரதி கலை இலக்கியக் கழகம்,
இன்று பாரதி விருது வழங்கி
கௌரவிப்பது சாலத்தகும்!

திரு.கிரேசி மோகன்
மென்மேலும் சாதனை படைக்க
வல்லமையின் மனமார்ந்த
வாழ்த்துகள்!
Submit your reply    

===========================================================================
Subject: நீண்டதொரு பயனம்
Message: #2  2023-01-31  
நிறைகுடமாய் நீண்டதொரு
பயணம்!
சாக்லேட் கிருஷ்ணா
Submit your reply    

===========================================================================
Subject: நீண்டதொரு பயனம்
Message: #1  2023-01-30  
ஓராயிரம் பார்வையிலே
Submit your reply    

===========================================================================
Subject: நீண்டதொரு பயனம்
Message: #0  2023-01-27  

Submit your reply    

===========================================================================

 Next 1 >>

Showing results 0 to 3 of 4

 Print this Page
       
===========================================================================