Message: #2 2025-12-06 
முகப்பு அறத்துப்பால் துறவறவியல் தவம்
தவம்
குறள் பாடல்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. (௨௱௬௰௧ - 261)
தமக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும், பிறவுயிருக்குத் தாம் துன்பஞ்
செய்யாமலிருத்தலும் ஆகிய அவ்வளவினதே தவத்திற்கு உள்ளதான வடிவம்
ஆகும் (௨௱௬௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யா
திருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும் (௨௱௬௰௧)
—மு. வரதராசன்
பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது,
துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான்,
தவம் என்பதன் இலக்கணம். (௨௱௬௰௧)
—சாலமன் பாப்பையா
எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு
செய்யாமல் இருப்பதும்தான் ``தவம்'' என்று கூறப்படும் (௨௱௬௰௧)
—மு. கருணாநிதி
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது. (௨௱௬௰௨ - 262)
தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே தவமும் கைகூடும்;
தவப்பயன் இல்லாதவர்கள் அதனைத் தாமும் மேற்கொள்வது வீணான
முயற்சியே! (௨௱௬௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும். (௨௱௬௰௨)
—மு. வரதராசன்
முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம்
செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை
மேற்கொள்வதும் வீண்தான். (௨௱௬௰௨)
—சாலமன் பாப்பையா
உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை
வாய்க்கும் எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை
மேற்கொள்வது வீண் செயலேயாகும் (௨௱௬௰௨)
—மு. கருணாநிதி
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். (௨௱௬௰௩ - 263)
துறவியர்க்கு உணவு முதலாயின தந்து உதவுதலின் பொருட்டாகவே,
இல்லறத்தார்கள் துறவுநெறியைத் தாம் மேற்கொள்ள மறந்தனர்
போலும்! (௨௱௬௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என
விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ
(௨௱௬௰௩)
—மு. வரதராசன்
துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம்
செய்வதை மறந்து இருப்பார்கள் போலும். (௨௱௬௰௩)
—சாலமன் பாப்பையா
துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள்
கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக்
கூடாது (௨௱௬௰௩)
—மு. கருணாநிதி
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். (௨௱௬௰௪ - 264)
பொருந்தாத பகைவரைத் தண்டித்தலும், தம்மை விரும்பும் அன்புடையவரை
உயர்த்துதலும் தவ வாழ்வினால் மிகவும் எளிதாக வந்து கைகூடும் (௨௱௬௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை
உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.
(௨௱௬௰௪)
—மு. வரதராசன்
பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால்,
தவத்தால் அதைச் செய்ய முடியும். (௨௱௬௰௪)
—சாலமன் பாப்பையா
மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக்
காக்கவும் முடியும் (௨௱௬௰௪)
—மு. கருணாநிதி
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். (௨௱௬௰௫ - 265)
வேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறுகின்றதனால், செய்வதற்குரிய
தவம் இவ்விடத்திலேயே விரைவாகச் செய்யப்படுவதற்கு உரியதாகும் (௨௱௬௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க
தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும். (௨௱௬௰௫)
—மு. வரதராசன்
விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம்
முயன்று செய்யப்படும். (௨௱௬௰௫)
—சாலமன் பாப்பையா
உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால்,
அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும் (௨௱௬௰௫)
—மு. கருணாநிதி
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. (௨௱௬௰௬ - 266)
தம் உயிருக்கு நன்மை செய்பவர் தவம் செய்பவரே யாவர்; மற்றையோர்,
ஆசைகளுக்கு உட்பட்டுத் தம் உயிருக்குத் தீமைகளைச் செய்பவர்களே ஆவர் (௨௱௬௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர்
அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே. (௨௱௬௰௬)
—மு. வரதராசன்
தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ
ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர். (௨௱௬௰௬)
—சாலமன் பாப்பையா
அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த
தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு
மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில்
ஈடுபடுபவர்கள் (௨௱௬௰௬)
—மு. கருணாநிதி
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (௨௱௬௰௭ - 267)
சுடச்சுட ஒளிவிடும் பொன்னே போல, துன்பம் சுட்டு வருத்த வருத்த,
தவஞ்செய்பவருக்கும் உண்மையான அறிவுடைமையானது மேன்மேலும்
ஒளிபெற்று வரும் (௨௱௬௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை
துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும் (௨௱௬௰௭)
—மு. வரதராசன்
நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த
வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும். (௨௱௬௰௭)
—சாலமன் பாப்பையா
தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை
எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல்
புகழ் பெற்றே உயர்வார்கள் (௨௱௬௰௭)
—மு. கருணாநிதி
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். (௨௱௬௰௮ - 268)
‘தான்’ என்னும் செருக்கானது தன்னிடமிருந்து நீங்கிய தவவலிமை பெற்றவனை,
உலகத்தில் செறிந்துள்ள உயிர்கள் எல்லாம் தொழுது போற்றும் (௨௱௬௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை
மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும். (௨௱௬௰௮)
—மு. வரதராசன்
தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள்
எல்லாம் தொழும். (௨௱௬௰௮)
—சாலமன் பாப்பையா
``தனது உயிர்'' என்கிற பற்றும், ``தான்'' என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை
உலகம் புகழ்ந்து பாராட்டும் (௨௱௬௰௮)
—மு. கருணாநிதி
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். (௨௱௬௰௯ - 269)
தவநெறியாலே ஆத்ம வலிமையைப் பெற்ற மகான்களுக்குத் தம்மிடத்தே வருகின்ற
கூற்றத்தையும் எதிராக நின்று வெற்றி கொள்வதற்கு முடியும் (௨௱௬௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும்
இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும் (௨௱௬௰௯)
—மு. வரதராசன்
தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும். (௨௱௬௰௯)
—சாலமன் பாப்பையா
எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும்
ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள் (௨௱௬௰௯)
—மு. கருணாநிதி
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். (௨௱௭௰ - 270)
உலகில் மெய்யறிவு அற்றவர்கள் பலராகியதன் காரணம், தவம் செய்பவர்
சிலராகவும், தவம் செய்யாதவர் பலராகவும் இருப்பதுதான் (௨௱௭௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர்
சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும். (௨௱௭௰)
—மு. வரதராசன்
பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது
இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள்
பலராக இருப்பதற்கு இதுவே காரணம். (௨௱௭௰)
—சாலமன் பாப்பையா
ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக
இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான் (௨௱௭௰)
—மு. கருணாநிதி
|