Message: #0 2021-12-17 
சரீர ஸாதனை, ஆத்ம
ஸாதனை இரண்டும்
வேண்டும்
ஜன்மா பூரா ஒருத்தன் ஏதோ
மாடுமாதிரி தேஹத்தால்
அலைந்து திரிந்து,
கையையும் காலையும்
ஆட்டிக்
கொண்டிருந்துவிட்டு,
சாந்தமாக ஸெளக்கியமாக
ஈச்வர பரமான,
ஆத்மார்த்தமான
விஷயங்களைத் தெரிந்து
கொள்ளாமலும் பக்தி,
தியானம் எதுவுமே
இல்லாமலும் ஜீவனை
விட்டானென்றால் அவன்
மநுஷ்ய ஜன்மா எடுத்தே
ப்ரயோஜனமில்லைதான். ஆனால்
செய்ய வேண்டிய நிலையில்
சரீர உழைப்புப்
பண்ணியேயாக வேண்டும்.
பொதுவாக இப்போது ஜனங்கள்
இருக்கிற லோகாயதமான,
அபக்வமான ஸ்திதியில்
அவர்களில் பெரும்பாலார்
நீண்ட காலத்துக்கு
சரீரத்தால் உழைத்து
உழைத்தே சித்தசுத்தி பெற
வேண்டியவர்களாகத்தான்
இருக்கிறார்கள்.
மூளையால் மட்டும் வேலை
செய்கிறவனுக்கும், பேனா
வேலைக்காரனுக்கும்
சரீரத்தால் உழைப்பவனைப்
போல அசந்து தூக்கம்
வருகிறதோ? தூக்கம்
வராவிட்டால் மனஸ்
எங்கேயாவது
திரிந்துகொண்டே அழுக்கைச்
சேர்த்துக்கொள்கிறது.
நன்றாக உழைத்துவிட்டு
வந்தவன் இப்படியெல்லாம்
கெட்ட சிந்தனைகளில்
போகாமல் நன்றாகத்
தூங்குகிறான். அதனால் தேஹ
பலம், புத்தி பலம் இரண்டும்
உண்டாகிறது. தேஹத்தையும்
புத்தியையும் ‘கனெக்ட்’
பண்ணுகிற nervous system-ஐ அவன் பாழ்
பண்ணிக்கொள்கிறதில்லை.
சரீர உழைப்பில்தான்
ஆரம்பித்தாக
வேண்டியிருக்கிறது. ஆனால்
சரீரத்தோடு நின்றுவிடாமல்
அந்த ஆரம்ப நாளிலிருந்தே
ஈச்வரபரமான விஷயங்களிலும்
‘டச்’ வைத்துக் கொண்டேயாக
வேண்டும். போகப் போக ‘டச்’
பண்ணினால் மட்டும் போதாது,
‘டச்’ பண்ணுவதை கையில்
பிடித்து
வைத்துக்கொள்ளவும்
ப்ரயத்னப்பட வேண்டும்.
அத்யாத்ம ஸமாசாரங்களில்
அதிகம் ஈடுபட வேண்டும்.
ஆனால் இப்போதும், இவன்
ஆத்மாபிவிருத்தியில்
உச்சாணிக் கொம்புக்கே
போய்விட்டாலும்
அப்போதுங்கூட, சரீரப்
பணியில் இவன் ‘டச்’சை
அடியோடு விட்டுவிடக்
கூடாது. ஜீவன்முக்தன்
என்று என்னவோ
சொல்கிறார்களே,
நமக்கெல்லாம்
அப்படிப்பட்ட ஸ்திதி
புரிவதுகூடக்
கஷ்டமாயிருக்கிறதே, அந்த
ஸ்திதி வந்து நமக்கென்று
மனஸில்லை, எண்ணமில்லை,
‘ப்ளான்’ இல்லை என்று
ஆகிறமட்டும், நாமாக
உடற்தொண்டை அடியோடு
விட்டோமென்று இருக்கவே
கூடாது. அதனால்தான்
பெரியோர்கள், ”ஒரு கையால்
ஈச்வரனைப்
பிடித்துக்கொண்டே இன்னொரு
கையால் லோக கார்யங்களைப்
பண்ணு” எண்ணுகிறார்கள்.
முதலில் சரீர வேலை ஜாஸ்தி,
ஆத்மார்த்த சிந்தனை
குறைச்சல்; பிறகு இரண்டும்
ஸமம்; அப்புறம்
ஆத்மார்த்தம் ஜாஸ்தி, சரீர
வேலை குறைச்சல் என்று
அதாவது எல்லா ஸ்டேஜிலும்
இரண்டில் எந்த ஒன்றுமே
இல்லை என்று இல்லாமல்
இருக்க வேண்டும். இதற்கும்
அப்புறம் ஈச்வரனே நம்மை
நடத்தி வைப்பது தெரியும்.
அந்த ஸ்திதியில்
பரமஞானிகளாக இருந்து
கொண்டே ஓயாமல் ஒழியாமல்
காரியம் பண்ணினவர்களும்
உண்டு. லோகமே தெரியாமல்
கல்லு மாதிரிக்
கிடந்தவர்களும் உண்டு.
அங்கே போகிற மட்டும் மெய்
வருந்திப் பரோபகாரமாக
எல்லாரும் உழைக்கத்தான்
வேண்டும். பலஹீனர்கள் தவிர
மற்ற எல்லாரும் சரீர
கைங்கர்யம் நிறையப்
பண்ணத் தான் வேண்டும்.
பலஹீனர்கள் இதற்கு ஈடாக
மற்ற தினுசுகளில்
பொதுப்பணி செய்ய வேண்டும். |